ஆசை பொங்குது பால்போலே…எவர்கிரீன் எஸ்.ஜானகி

ஆசை பொங்குது பால்போலே…எவர்கிரீன் எஸ்.ஜானகி

நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு

வேலை இல்லாத பட்டதாரி படத்தில் அனிருத் இசை யில் அம்மா அமமா என தனுஷ் பாட, தொடர்ந்து மேற் படி வரிகளை எஸ்.ஜானகி பாடும்போது, சாரி.. உருக்கி எடுககும்போது கண்ணோரம் நீர் கசியாத ஆட்களே இருக்கமுடியாது 76 வயதிலும் மங்காத குரல் வளத்தால் ஹிட் கொடுக்க முடிந்த அதிசய பிறவி எஸ்.ஜானகி

2013-ல் மிகவும் தாமதமாக கொடுக்கப்பட்டதால் மத்திய அரசின் பத்ம பூஷண் விருதை நிராகரித்ததில் தெரிந்தது ஒரு இசையரசின் தன்மான உணர்வு.. ஆறின கஞ்சி பழங்கஞ்சி என பொட்டில் அறைந்தார் போல சொன்னது அவரின் அந்த நேரத்து செயல்பாடு.

காரணம் ஜானகியின் திரையிசைப்பயணம் அவ்வளவு எளிதானது அல்ல.. பல தடைகளுக்குப்பிறகே ஏற்றம் கண்ட பயணம் அது.

1970-களில் சீரான அந்த அருவியின் மகிமை ரசிகர்களை மறுபடியும் மறுபடியும் ஆனந்த குளியல் போடவைத்தது..

ஜாம்பாவான் ஸ்ரீதர் 1971-ல் அவளுக்கென்று ஒரு மனம் என ஒரு படம் கொடுத்தார். அதில் உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் என்றொரு பாட்டு வரும்.

காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது..
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது
எம்எஸ்வி இசையும் ஜானகியின் குரலும் பாலும் தேனும் கலந்த ஒரு அருவியாய் ஓடும்.. இசைப்பிரியர்களுக்கு எந்த காலத்திலும் பிடித்த கிளாசிக்கிற்கெல்லாம் கிளாசிக் பாடல் அது.

ஜானகியின் குரலுக்கு உரம்போட்டால் எவ்வளவு அமோக விளைச்சல் கிடைக்கும் என்பதை நன்றாக புரிந்துவைத்து அதை சமயம்கிடைக்கும் போதெல்லாம் அற்புதமாக பயன்படுத்தியவர் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. கமலின் அவர்கள் படத்தில் ”காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி ” பாடலை இன்றும் கேட்டுப் பாருங்கள், எம்எஸ்வியின் ஆர்ப்பரிக்கும் இசைக்கோர் வையையே ஜானகியில் குரல் பின்னுக்கு தள்ள துடியாய் துடித்திருக்கும்..

எத்தனையோ வாத்தியங்கள் மூலம் இசை பொழிந்து கொண்டே இருக்கும்..ஆனால் ஒத்தைக்குரலில், ‘’நான் வானிலே மேகமாய்..மூன்று வார்த்தைகளை படிப்படி யாக ஏற்றி விண்ணுக்கே பறக்கும் ஜானகியின் குரல் அப்படியொரு துள்ளல் அது.

எம்எஸ்வியோடே இணைந்து சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் அதே வரிகளைக் கொண்ட பாடலும் திருப்பி திருப்பி கேட்கவைக்கும் மேஜிக் ரகமே..

இவ்வளவு தூரம் ஆட்டிப்படைத்த ஜானகிக்கு 1950-களின் மத்தியில் பாட ஆரம்பித்தபோது தொடர்ந்து பல படங்கள் கிடைத்தபடியேதான் இருந்தன.

தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் என நான்கு மொழி படங்களிலும் எஸ்.ஜானகி வலம் வந்தார். பாடல்கள் எண்ணிக்கை கூடியதே தவிர, பெரியதாக ஒன்றும் வெற்றிக்கொடி நாட்டிவிடமுடியவில்லைகாரணம், பி.சுசிலா, ஜமுனா ராணி, ஜிக்கி போன்றோ ருடன் எம்எல் வசந்தகுமாரி, பி.லீலா போன்றவர்கள் கோலேச்சிக்கொண்டிருந்த நேரத்தில், வெறும் ஹம்மிங் கணக்காகவே எஸ்.ஜானகி பாடியதுதான்.

ஜானகியைபோலவே தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட பி.சுசிலா தமிழை அட்சர சுத்தமாக உச்சரித் தார். ஆனால் ஜானகியோ கொஞ்சும் குரலில் வார்த்தைகளை விழுங்கிக்கொண்டே இருந்தார்.

1959-ல் வெளியான தாய் மகளுக்கு கட்டிய தாலி படத்தில்,” ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ”
என்றொரு பாடல். எம்ஜிஆரும் ஜமுனாவும் பாடும் டூயட். சத்திய சோதனையாக, வெண்கலக்குரலோன் சீர்காழி கோவிந்தராஜனோடு எஸ்.ஜானகி பாடுவார்.

டிஎம்எஸ்சே கூட நின்று பாடினால், கோவிந்தராஜன் குரல் வளம் முன் எடுபடாது. அப்படிப்பட்ட சீர்காழி, எம்ஜிஆருக்கு பாடுவது துல்லியமாக விளங்குவதும், ஜமுனாவுக்காக ஒலிக்கும், ”சீர் மிகுந்த திராவிடத்தின் லட்சியமே” என்ற வார்த்தைகள் ஜானகியின் கொஞ்
சல் குரலில் காணாமல் போவதும் பரிதாபமாக இருக்கும்.

இப்படிப்பட்ட தள்ளாட்ட இசைப்பயணத்திற்கு முடிவு கட்ட வைத்து, தமிழகம் முழுவதையும் பித்து பிடிக்கச் செய்தது… 1962 கொஞ்சும் சலங்கை படத்தின் அந்த ”சிங்காரவேலனே தேவா” என ஜானகி பாடிய பாடல்.

எஸ்எம் சுப்பையா நாயுடு இசையில் ஒரு நாதஸ்வர த்துடன், ஒரு குரல் வடிவ புல்லாங்குழல் போட்டி போட்டு அதகளம் பண்ணிய அற்புத அத்தியாயம் அது.
ரசிகர்களை திரும்ப தியேட்டர்களுக்கு இழுத்துப் போட்டபடியே இருந்த இந்த பாடலால் பல இடங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது படம் ..

அதே 1962-ல் பாசம் படத்தின் ஜல்ஜல் எனும் ”சலங்கை ஒலி”, ”மாலையும் இரவு சந்திக்கும் இடத்தில்”…ஜானகி பாடிய இந்த பாட்டெல்லாம் இன்றைக்கும் இரவுப் பொழுதுகளை அவ்வளவு இனிமையாக்கும் வல்லமை பெற்றவை..

தமிழ் சினிமா பின்னணி பாடகிகள் உலகில் முடிசூடா ராணியாக விளங்கிய பி.சுசிலாவுக்கு, போட்டியாளராக ஒருவர் வருவார் என ஆருடம் சொன்ன வருடம் 1962.

பாதகாணிக்கையின் ”பூஜைக்கு வந்த மலரே வா…” ஆலயமணியின் ”தூக்கம் “உன் கண்களை தழுவட்டுமே…” போலீஸ்காரன் மகனின் ”பொன் என்பேன் சிறு பூ என்பேன்…” சுமைதாங்கியின்…”ஓ ஓ மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு.” வீரத்திருமகன் படத்தில் ”பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்..” என அடுத்தடுத்து ஜானகி கொடுத்து ஹிட் பாடல்கள் இன்றைக்கும் தமிழ் திரைஇசை உலகில் எவர்கிரீன் ரகங்கள்.

மென்மையான குரலில் பாடிய பி.பி.ஸ்ரீனிவாசுடன் ஜானகி பாடினாலும், டிஎம் சௌந்தர்ராஜன் கொஞ்சம் சவாலாகவே இருந்தார். இருந்தாலும் அதையும் எதிர்கொண்ட ஜானகி வெற்றியும் பெற்றார்.

அருணகிரி நாதர் படத்தில் ஆடவேண்டும் மயிலே என்று ஆண்மையின் அக்மார்க் அவதாரமாக டிஎம்எஸ் பாட, அழகோடும் விளையாடும் என ஜானகி பெண்மையின் மென்மை புல்லாங்குழலாய் பாடுவார்.

அதே டிஎம்எஸ்சுடன் மோதிப்பார்க்கலாமா என்று கோதாவில் இறங்கிய விதம் அலாதியானது. குங்குமம் படத்தின் ”சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத் தை சொல்லுதம்மா” என்ற பாடல்.. டிஎம்எஸ்சும் ஜானகியும் பரஸ்பர குரல் பலத்தை காட்டி பின்னணி உலகில் ஒரு குத்துச்சண்டை போட்டியே நடத்தியிருப் பார்கள்.

என் அண்ணன் படத்தின் ”நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்…” பூக்காரி படத்தின் ”காதலின் பொன்வீதியில்” பாடலெல்லாம் இப்படிப்பட்ட ரகமே.

டிஎம்ஸ் பி.சுசிலா அண்ட்கோ எம்ஜிஆர் சிவாஜி சகாப்தத்தை நிறைவு செய்த கட்டத்தில் இளையராஜா வின் வரவால் எஸ்பி பாலசுப்ரமணியம்- எஸ் ஜானகி என்ற புதிய காம்பினேஷன் உருவானது.. ரஜினி, கமல் ஆரம்ப காலத்து சகாப்தம் அது..
..
பதினாறு வயதினிலேவில் செந்தூரப்பூவே என்று அடுத்த தலைமுறையுடன் கைகோர்த்த ஜானகியின் குரல், ஜானி படத்தின் காற்றே உந்தன் கீதம், நெற்றிக்கண் படத்தின் ”ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்”, மெல்லத்திறந்தது கதவு படத்தின் ”ஊரு சனம் தூங்கிடிச்சி”, அபூர்வ சகோதரர்கள் படத்தின் ”வாழவைக்கும் காதலுக்கு ஜே” என இளையராஜா உபயத்தில் எண்பதுகளை அப்படியே கபளிகரம் செய்தது.

சிவகுமார்- ராதா நடித்த ஆனந்தராகம் படத்தின் ”ஒரு ராகம் பாடும் பாடல்” யேசுதாசுக்கும் இவருக்கும் நடந்த 20:20 மேட்சே..

எண்பதுகளையும் தொண்ணூறுகளையும் முழு அளவில் ஆட்டிப்படைத்த ஜானகியால் தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம் இந்தி என பல மொழிகளிலும் 40 ஆயிரம் பாடல்களுக்குமேல் பாடி கின்னஸ் சாதனையையே நிகழ்ந்த முடிந்தது..
ஜானகி வாங்காத விருதுகளே இல்லை என்ற பெருமைக்கு சொந்தம் கொண்டாட வைத்தது அவரின் குரல்.

தேவர் மகனில் இஞ்சி இடுப்பழகி,,மஞ்ச சிவப்பழகி என நாக்கிலேயே டப்பு டிப்பு வாசித்த பின்னணி பாடகி எஸ். ஜானகியின் 81 வது பிறந்த நாள் இன்று.

-ஏழுமலை வெங்கடேசன் (மூத்த பத்திரிகையாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up