Comali

Follow
6

Fair

Comali Review

கோமாளி விமர்சனம்

கால ஓட்டத்தில், எத்தனையோ நவீன மாற்றங்களும், புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகி மனிதனின் வாழ்க்கையை மாற்றினாலும், எமோஷன்ஸ் (உணர்ச்சிகள்) மட்டும் மனிதர்களிடம் இருந்து மறைந்திருக்காது என்பது பதினாறு வருடங்கள் கோமாவில் இருந்து விழித்த கோமாளியின் நம்பிக்கை.

கதை?

தனது குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு சிலை, எம்.எல்.ஏ. தர்மராஜிடம் உள்ளது என அறிகிறான் நாயகன் ரவி. 16 வருடங்களைத் தொலைத்த நாயகன், அந்தச் சிலையைத் தொலைத்தானா மீட்டானா என்பதே கதை.

எம்.எல்.ஏ. தர்மராஜாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளார். அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்ற அடையாளம் கிடைத்ததும், எந்தக் கோயிலுக்குள் நுழைய விடாமல் அவரைச் சிறிய வயதில் துரத்தினார்களோ, அதே கோயிலில் மாலையும் பரிவட்டமும் கிடைக்கிறது. அவர் படத்தில் வில்லனாக வந்தாலும், இங்கு நிலவும் சமூக ஏற்றத்தாழ்வினால் ஏற்பட்ட வடுவை ஒரு சின்ன ஷாட்டில் அழகாகப் பதிந்துள்ளனர். அதற்காக இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். தன் மகளை கையில் ஏந்திக் கொண்டு, நாயகனுக்கு நன்றி சொல்லும் காட்சி வரை கே.எஸ்.ரவிக்குமாரின் அனுபவம் மிக்க நடிப்பு படத்திற்குப் பெரிய பிளஸ்.

படத்தில் இரண்டு கதாநாயகிகள். நாயகனின் பள்ளிப் பருவத்துக் காதலியாக சம்யுக்தா ஹெக்டேவும், கோமாவில் இருந்து மீண்ட பின் நாயகன் காதலில் விழும் நபராக காஜல் அகர்வாலும் நடித்துள்ளனர். இருவரில் ரேஸில் வெல்வது, பிக் பாஸிற்குள் சென்ற கஸ்தூரியின் ஜாடையில் உள்ள சம்யுக்தா ஹெக்டே தான். அவரது கணவர் மருத்துவர் தியாகேஷாக நடித்துள்ள சா ரா படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். காஜல் அகர்வாலை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

யோகி பாபுவின் டைமிங் காமெடியைப் படத்தில் எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் ஜெயம் ரவியின் தங்கை கணவராக, இரண்டு ஆண் பிள்ளைகளின் தந்தையாக குணசித்திர வேடத்தில் தன்னை அழகாகப் பொருத்திக் கொண்டுள்ளார். யோகி பாபுவைக் கவுன்ட்டர் மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்த இயக்குநர்கள், அவரை இப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம் என இப்படத்தைப் பார்த்து உணர்வார்கள்.

ஜெயம் ரவியின் தங்கை, அவரைத் திட்டி அவமானப்படுத்தும் காட்சி உணர்வுபூர்வமாக வந்துள்ளது. அக்காட்சியில் மட்டுமே அத்தகைய உயிர் இருந்தது. வெள்ள நீரில், கர்ப்பினிப் பெண்ணை நாயகன் தூக்கிக் கொண்டு செல்லும் இறுதிக் காட்சியில் கூட அதில் பிரதிபலிக்கப்படவில்லை. பதினாறு வருடங்களைத் தன் வாழ்க்கையில் இழந்த ஒருவனின் மனோநிலையைச் சரியாகப் பிரதிபலிக்காமல் கோமாளியாகவே சித்தரித்துள்ளார். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் கோமாளி கோமானாகப் பரிணமித்திருப்பான்.

-தினேஷ் ராம்

Lost Password

Sign Up