Devarattam

Follow
5.5

Average

10

User Avg

Devarattam Review

தேவராட்டம்- விமர்சனம்

இயக்குநர் முத்தையாவின் “தான் பார்த்த வாழ்ந்த கதை” என்ற கூற்றுப்படி வேற்றுப்படிகள் எதுவும் இல்லாமல் ஹீரோ தீயவர்களை வேரறுத்து முடிவில் ‘சாதி’க்கும் படமாகவே வந்துள்ளது தேவராட்டம்.

சேகுவேரா படம் போட்ட டி.சர்ட்டில் கெளதம் கார்த்திக் வந்த சீனைப் பார்த்து ஷாக் ஆவதை விட அரசியல் உலகில் அரிய பொக்கிஷமாக கருதப்படும் நல்லக்கண்ணு அய்யா போட்டோவை ஹீரோ வீட்டில் மாட்டி வைத்து ஒரு அரசியல் செய்திருப்பதில் தான் அதிக அதிர்ச்சி.

படத்தில் ஒரு வசனம் வருகிறது. “என்னைக்கு இவன் நேதாஜி படத்தையும் நல்லக்கண்ணு அய்யா படத்தையும் வீட்டுல மாட்டி வச்சானோ அன்னையில இருந்து இப்படித் தான் திரியிதான்”என்று. அதாவது படத்தில் ஹீரோவின் முழு நேர வேலை ஒவ்வொரு கட்டுக்கும் ஒருவரை வெட்டுவது தான். இந்த கேரக்டர் நல்லக்கண்ணு அய்யாவின் வழியில் நடக்கிறது என்ற கருத்தில் நல்லக்கண்ணு அய்யாவின் ஆகப்பெரும் அரசியலையே ஆழத்தில் போட்டு கொன்று விட்டார்கள். இயக்குநருக்கு நல்லக்கண்ணு அய்யா என்ன பாவம் செய்தாரோ?

மேலும் நல்லக்கண்ணு அய்யா போட்டோவை பயன்படுத்தியதிற்கும் ஒரு ‘அடையாள’ காரணம் இருப்பதாக ஒரு முக்கியமான பத்திரிகையாளர் சொன்னபோது மனம் விக்கித்துப் போனது.

படத்தில் எங்கேயுமே பிற சாதிகளை சீண்டும் வசனங்கள், காட்சிகள் துளியும் இல்லை. அந்த வகையில் இயக்குரின் அக்கறையைப் பாராட்ட வேண்டும். ஆனால் இனனும் அக்கரையில் நின்றே தான் படம் எடுக்க வேண்டுமா இயக்குநரே? ஒரு படைப்பாளன் தான் வாழ்ந்த பார்த்த கதையை மட்டும் தான் பதிவு செய்வேன். அதுவும் நான் வாழ்ந்த சமூகத்தில் இருந்து தான் பதிவுசெய்வேன் என்பது ஒரு பேஸ்புக் எழுத்தாளிக்கு அழகு. ஒரு திரைப் படைப்பாளிக்கு அழகா? பாரதிராஜா மகேந்திரன் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் அப்படி நினைத்திருந்தால் சினிமா நிலைமையும் சமூகநிலைமையும் என்னவாக ஆயிருக்கும்?

உங்களிடம் நல்ல கிரியேட்டிவ் சென்ஸ் இருப்பதை கொம்பன் படம் மூலமாக அழகாக உணர்த்தியுள்ளீர்கள். பின் ஏன் இப்படி ஒரே கொம்பில் பயணிக்க வேண்டும். படத்தில் பெண்ணைத் தொடுபவனை வெட்டணும் குத்தணும் என்பதைச் சொல்லிக்கொண்டு பெண்களுக்கு ஆண்கள் தான் எல்லாம் என்று பதிவு செய்திருக்கிறீர்கள். பொதுவாக நம் பாதுகாப்பின் கீழ் ஒருவர் வந்துவிட்டால் அவரை நாம் எப்படி அணுகுவோம்? அடிமை போல தானே?

கருத்தியலை விட்டு காட்சிகளுக்கு வருவோம். படத்தின் இசை அமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் நல்ல வேலையைச் செய்து படத்தை ஓரளவு காப்பாற்றி இருக்கிறார்கள். 6 பாடல்களின் வரிகளிலும் மோகன்ராஜன் வசீகரித்து இருக்கிறார். கெளதம் கார்த்திக் இனி கெத்தாக காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு ஆக்‌ஷன் கதைகளைக் கேட்கலாம். அந்தளவுக்கு மாஸ் மொமண்ட்ஸ் எல்லாம் அவருக்குப் பக்காவாக ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது. மஞ்சிமா மோகன் பாடல்களுக்கு மட்டும் வரவில்லை என்றால் எதோ ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் என்று தான் நினைத்திருப்போம். இந்த வக்கீல் என்று சொல்லிக்கொண்டு கு.ஞானசம்பந்தன் ஒரு காட்சியில் வந்தார். அடுத்து எங்கே போனார் என்றே தெரியவில்லை. கெளதம் கார்த்திக் கூட படத்தில் வக்கீல் தானாம்!

சூரி, போஸ்வெங்கட், வினோதினி, கவனிக்க வைக்கிற பெர்பாமர்ஸ். வில்லன் பெப்சி விஜயன் மிரட்டலாக நடித்திருக்கிறார்/அடித்திருக்கிறார். முனாதியில் இருந்த ஜிகிர்தண்டா திரைக்கதை பின்பாதியில் ஊசிப்போன உளுந்தவடையாக மாறிபோனது தனிப்பெரும் சோகம்.

வசனங்கள் பல இடங்களில் சிறப்பு. “இந்த நாட்டுல கண்ணகிக்குப் பொறந்தவன் மட்டும் தான் இருக்கணும்” என்பது போன்ற சில்லண்டி வசனங்கள் தான் செம்ம கடுப்பு.

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up