Gurkha

Follow
6

Fair

Gurkha Review

கூர்கா- விமர்சனம்

ஊருக்காக விழித்தலையும் கூர்காவை ஊறுகாய் ரேஞ்சிக்கு கூட மதிக்காத லோக்கல் கவுன்சிலருக்கு தங்கள் பாதுகாப்பு மூலமாக பாடமெடுத்து கூர்கா யோகிபாபு என்ட்ரி கொடுக்கிறார். போலீஸ் ஆகவேண்டும் என்ற அவரது வேட்கைக்கு உடல் ஒத்துழைக்காமல் போக, குலத்தொழில் (கூர்கா) முறைக்கு வருகிறார் யோகி.

ஒரு மாலில் சார்லியுடன் கூர்காவாக பணியாற்றும் யோகிபாபுவிற்கு அமெரிக்கத் தூதரக அதிகாரியாக வரும் எலிசா மீது காதல் வேறு.

இந்தத் தரமான சம்பவங்கள் ஒருபுறம் நடக்க, அந்த மாலில் அனைத்து காவல்துறை அதிகாரிகளின் மனைவிகளையும் வரவழைத்து ப்ளாக்மெயில் செய்து பணம் பறிக்க திட்டம் போட்டு அதைச் செயல் ஆற்றுகிறார்கள் ராஜ்பரத் தலைமையிலான டீம். அவர்களை மீட்க யோகிபாபுவை நம்பி ஆகவேண்டிய நிலை காவல்துறைக்கு. கூர்கா எப்படி கெத்து காட்டினார் என்பது தான் மீதிக்கதை.

இடைவேளைக்குப் பிறகான படம் தான் படத்தின் வெற்றிக்கு அச்சாரம் போடுகிறது. லாஜிக் பற்றி எந்த யோசனையும் இல்லாமல் படம் பார்த்தால் எந்த வேதனையும் இல்லாமல் சிரித்தபடியே வெளியில் வரலாம். செல்லூர் ராஜுவின் தெர்மாகோல், ரஜினியின் ஆன்மீக அரசியல், விஜய்காந்த் மகன் நடித்த சகாப்தம், மெர்சல் விஜய் , விஸ்வாசம் 125 கோடி வசூல், விஷால், சிம்பு என சகலத்தையும், சகலரையும் கலாய்த்து துவைத்திருக்கிறார்கள். எல்லாமே ரசிக்கும் படியாக இருக்கிறது.

யோகிபாபு தனது ஒன்லைனர்களால் வழக்கம் போல் அதகளப் படுத்தி இருந்தாலும் ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் தெரிந்த நடிகர் யோகிபாபுவை மிஸ் செய்கிறோமோ என்றும் தோன்றுகிறது. சார்லி காமெடியும் செய்கிறார். ஒரு இடத்தில் நாலு வரி வசனத்தில் மனதை லேசாக கனக்கவும் வைக்கிறார். ஆடுகளம் நரேன், ரவிமரியா, மயில்சாமி, மனோபாலா முக்கியமாக ஆனந்த்ராஜ் என ஸ்கீரினில் வரும் எல்லோருமே கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். நாயகியாக வரும் எலிசா அழகாக இருக்கிறார்; ஈர்க்கிறார். இந்தப்படத்தில் தனித்துத் தெரியும் நடிகர் வில்லனான ராஜ்பரத். அவர் தனித்துத் தெரிவதற்கான சாத்தியங்களை திரைக்கதையில் கையாண்டிருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன்.

ராஜ் ஆர்யனின் பாடல் மற்றும் பின்னணி இசை இரண்டும் பெரிதாக ஈர்க்காவிட்டாலும் சிறிதாகவும் சலிப்படைய வைக்கவில்லை. ஒரே லொக்கேஷனில் சுற்றும் படத்தை தனது கேமராக் கண்களால் காப்பாற்றி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த். எடிட்டர் ரூபனின் டேபிளில் சிறப்பான வேலை நடந்துள்ளது. சபாஷ்!

கதைக்காகவும் திரைக்கதைக்காகவும் பெரிதாக மெனக்கெடாவிட்டாலும் காமெடிக்காக அதிகம் உழைத்திருக்கிறார்கள். அந்த உழைப்பின் பலனை பின்பாதி படத்தில் ரசிகன் நன்றாக அனுபவிப்பான்.

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up