House Owner

Follow
7.5

Good

8.6

User Avg

House Owner Review

ஹவுஸ் ஓனர்- விமர்சனம்

தனது வீட்டை ஆதர்சமாகவும் அடையாளமாகவும் கொண்ட அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரின் மன வெளிப்பாடுகளும் அதைச் சகித்து அவர் மீது பேரன்போடு பாதுகாக்கும் மனைவிக்குமான வெள்ளம் சூழ்ந்த காதல் தான் ஹவுஸ் ஓனரின் கதைச் சாவி!

2015 ஆம் ஆண்டு சென்னையைப் புரட்டிய மழை வெள்ளத்தில் பூட்டிய வீட்டிற்குள் மாட்டிக்கொண்ட ஒரு வயதான தம்பதியினரின் உண்மைக் கதையோடு ஒரு காதலையும், சேர்த்து திரைக்கதையை வடிவமைத்து இருக்கிறார் இயக்குநர் லெட்சுமி ராமகிருஷ்ணன்.

படத்தின் நாயகன் கிஷோருக்கு நினைவிழப்பு நோய். (அல்சைமர்ஸ்) அருகில் இருக்கும் தன் மனைவியை வேறு யாரோ என பாவிக்கும் அளவிற்கு மறதி கொண்டவர். 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஸ்ரீரஞ்சினி தான் தன் மனைவி. இந்த வயதானவள் யாரோ என கிஷோர் ஸ்ரீரஞ்சினியை வெறுக்கும் காட்சிகள் எல்லாம் மனதை உருக்குபவை.
இரண்டு மணி நேரத்திற்கு சற்று குறைவான படத்தில் வீட்டில் செய்வதற்கு அவ்வளவு வேலை இருக்கிறது ஸ்ரீரன்சினிக்கு. இது அவரின் வாழ்நாளுக்குமான படம். ‘மனதி’ வாழ்ந்திருக்கிறார். இனி ஸ்ரீரஞ்சினி ராதாவாகத் தான் நினைவுகூரப்படுவார். வாழ்த்துகள்!

பகலெல்லாம் அதிகாரம் செய்துவிட்டு இரவில் கேட்கும் மழைச் சத்தத்தில் கிதங்கிப் போகும் கிஷோரின் நடிப்பு விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிக்கும்.

அவரின் இளவயது கதாபாத்திரத்தில் நடித்துள்ள பசங்க கிஷோரும் மிகையில்லாமல் நடித்திருக்கிறார். அவருக்கு பாலாக்காடு பிராமண பாஷை அவ்வளவாக ஒட்டவில்லை. ராணுவ வீரருக்கான உடல்வாகுக்கும் அவர் உழைத்திருக்கலாம். இளம் வயது ஸ்ரீரஞ்சினியாக நடித்துள்ள லவ்லின் சந்திரசேகர் அல்டிமேட் தேர்வு. கண்கள் பேசும் வசனங்களும் வசனம் பேசுகையில் அவர் கண்களும் கொண்டாட வைக்கின்றன.

படத்தின் முக்கியமான நாயகன் ஜிப்ரான். பின்னணியில் ஒலிக்கும் இசைக்கு இதய ஈர்ப்பு சக்தி இருக்கிறது. கதையை இசை அழகாக உணர வைக்கிறது. தபஸ்நாயக் ஒலி வடிவமைப்பை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். மழை ரோட்டில் விழும் போதும், வீட்டில் விழும் போதும் எழும் ஒலி வேறுபாடு அழகாக கேட்கிறது.

குறைகளோடு மனதனை ஏற்றுக்கொள்ளப்பட்ட இதயங்களில் அன்பிற்கு பஞ்சமே இருக்காது. தனக்கு நினைவுக்குறைபாடு இருக்கிறது என்பதை அறியாத கணவோடு ஸ்ரீரஞ்சினி நடத்தும் இல்லறம் இன்றைய இளசுகளுக்கான பாடம்.

படத்தில் சாவி ஒரு மையக் கதாப்பாத்திரம். அந்தச் சாவி சரியான நேரத்தில் கிடைக்கப்பட்டிருந்தால் கதவு திறக்கப்பட்டிருக்கும். படத்தின் முடிவும் வெளிப்படையாக தெரிந்திருக்கும். இந்தப்படத்தின் முடிவை லெட்சுமி ராமகிருஷ்ணன் இதுதான் என்று வரையறுக்கவில்லை. அதை நம் பொறுப்பில் விட்டுள்ளார். அதுவே படத்தின் மீதான மரியாதையை அதிகப்படுத்துகிறது.

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up