Love Action Drama

Follow
5.5

Average

Love Action Drama Review

லவ் ஆக்‌ஷன் ட்ராமா- விமர்சனம்

“ஒரேநாள்ல அம்பானியா ஆகணும் சார்” என்ற நினைப்பில் நயன்தாரா கூட்டணியில் நிவின்பாலி கை கோர்த்திருப்பார் போல. படம் பெயர் லவ் ஆக்‌ஷன் ட்ராமா. பிரேமம் படம் மூலம் தமிழில் போட்டுவைத்த புள்ளியைத் தொடர்ந்து இந்தப்படம் மூலமாக தமிழ்சினிமா மார்க்கெட்டில் தடம் பதிக்கலாம் என்ற ஆசையில் களம் இறங்கி இருக்கிறார் நிவின். தமிழில் தனியாக நடித்தாலே பிஸ்னெஸ் ஆகும் ஹீரோயின், சென்னையில் நடப்பது போன்ற கதை, நிறைய தமிழ்நடிகர்கள் என பக்கா ப்ளானோடு களம் இறங்கி இருக்கிறது லவ் ஆக்‌ஷன் ட்ராமா டீம்.

இப்படி பிஸ்னெஸுக்கு ப்ளான் பண்ணியது போல கதை திரைக்கதைக்கும் கொஞ்சம் ப்ளான் பண்ணி இருக்கலாம்.

முழுக்க முழுக்க காதலர்களுக்குள் இருக்கும் ஈகோவை அடிப்படையாக கொண்டுள்ள கதை. இதைப்போல ஆயிரம் கதைகளை பார்த்திருப்போம்..ஆனால் ட்ரீட்மெண்டில் முன்பாதி படம் நிஜமாகவே அசரடிக்கிறது. குறிப்பாக நிவின்பாலியின் காமெடி படத்திற்கு பெரியபலம். ஒரு நடிகனால் காமெடி பண்ண முடியும் என்றால் அவன் தான் நல்ல நடிகன் என்பார்கள். நிவின்பாலி தேறிவிட்டார். நயன்தாராவை நன்றாக நடித்துள்ளார் என்று சொல்லத்தேவை இல்லை. ஆனால் இந்தப்படம் அவர் வயதிற்கான படமல்ல என்பது நம் கருத்து. அவரது அனுபவ முதிர்ச்சி இந்தக்கேரக்டருக்கு வலு சேர்க்கவில்லை. இன்னபிற நடிகர்கள் யாரும் சோடை போகவில்லை. க்ளைமாக்ஸ் நெருக்கத்தில் வரும் ட்விஸ்ட் அட போட வைக்கிறது. அதற்காக பின்பாதியில் ரொம்பவே பொறுமையைச் சோதிக்கிறார்கள். நயன்தாரா நிவின்பாலியிடம் குடிக்காதே என்ற கோரிக்கையை படம் துவங்கியதில் இருந்தே வைக்கிறார். ஆனால் ஹீரோ அதை என்ட்கார்டு போடும் வரைக்கும் செய்யவே இல்லை. அப்ப இந்தப்படம் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? பெண்கள் சொல்லத்தான் செய்வார்கள். அதற்காக குடிக்காமல் இருக்க முடியுமா? என்று சொல்ல வருகிறாரா இயக்குநர். முதலில் நிவின்பாலி போன்ற பிரபலமான நடிகர் இப்படியான கேலிக்கூத்திற்கு துணை போகலாமா?

படத்தின் ஒளிப்பதிவு இசை எல்லாம் மலையாள சினிமாவிற்கே உள்ள தரத்தில் தரமாக இருக்கிறது. கதையும் அந்த தரத்தை எட்டி இருந்தால் நம் திராசில் இப்படத்திற்கு நல்ல எடையை கொடுக்கலாம். ஆனால் தப்பாப் போச்சே சேட்டா!

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up