நமக்கு தெரிந்தவரை சொல்லுவோம்..#HBD என்.டி.ராமாராவ்

நமக்கு தெரிந்தவரை சொல்லுவோம்..#HBD என்.டி.ராமாராவ்

வர்த்தக ரீதியாக புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் தென்னிந்தியாவின் நெம்பர் ஒன் சூப்பர் ஸ்டார். அதைவிட அற்புதமான நடிகர்.

முன்னூறுக்கும் மேற்பட்ட படங்கள்.. அதில் பெரும்பா லானவை வெள்ளி விழா மற்றும் ஓராண்டுக்கு மேல் ஓடியவை என்றால் சும்மாவா?..

ரிஸ்க்கே வேண்டாம் என்பதற்காக இவரின் வெற்றிப் படங்களைத்தான் எம்ஜிஆர் அடிக்கடி ரீமேக் செய்வார் என்பது இன்னொரு முக்கிய தகவல்.

இந்திய திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவான்களில் ஒருவரும் ஸ்டுடியோ உரிமையாளருமான எல்வி பிரசாத் அவர்கள்தான், இயக்குநர் என்ற வகையில் 1948-ல் மனதேசம் படத்தில் ஒரு சிறிய ரோலைக் கொடுத்து அறிமுகம் செய்து வைத்தார்

பாதாள பைரவி (1951) யில் கதாநாயகனாக மெகா ஹிட் அடிக்க அதன்பின் நான் ஸ்டாப் பிளையிங்தான்.. பாதாள பைரவியை இருபதுக்கு மேற்பட்ட தடவை பார்த்திருந்தாலும் இன்றும் டிவியில் போட்டால் குழந்தையாக மாறி பார்க்க ஆரம்பித்துவிடுவோம்..

மாயாபாஜார், லவகுசா அப்புறம் ஆக்சன் பக்கம் தலைவைத்து ராமுடு பீமுடு (பின்னாளில் எங்க வீட்டுப்பிள்ளை) கதாநாயகுடு ( பின்னாளில் நம்நாடு)…எல்லாமே வெறித்தனமாக ஓடி 1950, 60-களிலேயே கோடிகளை கொட்ட வைத்தவை..

நடிப்பு மட்டுமின்றி, தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக் கதை விநியோகஸ்தர் என ஏராளமான திறமைகள் கொண்டவருக்கு ஒரு குணம் உண்டு..அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் திரையில் கலக்குவது..

1977-ல் ‘தான வீர சூர கர்ணா’ என்றொரு படம்..கர்ணன், துரியோதன், (வழக்கம்போல்) கிருஷ்ணன் என மூன்று வேடம்..படம் முழுக்க இவர் மட்டுமே பேசுவதுபோல் இருக்கும். இதுபோதாதென்று படம் நாலே கால் மணிநேரம் (6394 மீட்டர் அதாவது 25 ரீல்கள்) ஒடும்..
நம்மூர் பாட்சாவைவிட இரண்டு மடங்கு..

80களில் ஒரு நாள் தூர்தர்ஷனில் காலையில் பதினோரு மணிக்கு போட்டு விளம்பரங்களோடு மாலையில் முடித்ததாக ஞாபகம்..

எல்லாம் போகட்டும் இந்த நாலே கால் மணிநேர காவி யத்தையும் தெலுங்கு மக்கள் 250 நாட்கள் ஓட வைத்து மற்ற மொழி சினிமாக்காரர்களை வியக்க வைத்தார்கள் தெலுங்கு தேச மக்கள்.

இன்னொரு படம் 1981-ல் பொப்புலிப்புலி…. நம்ம ஸ்ரீதேவி யுடன் பெல்பாட்டம் பேண்ட்டில் இவர் போட்ட ஆட்டம். .மனுஷனுக்கு இவ்வளவு தைரியமா என கிறுகிறுக்க வைத்தது..பொப்புலிபுலியும் 175 நாட்களுக்கும் பல திரையரங்குகளில் ஒடி கலக்கியது தனிக்கதை..

நம்மூர் கர்ணன் படத்திலேயே கண்ணனாக தமிழர் களை கும்பிடபோடவைத்த இவருக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நிரந்தர கிருஷ்ணன் அவதாரம் என்றால் தேவுடாவை பத்தி மேற்கொண்டு சொல்லவேண்டுமா?

அரசியல் பக்கம் திடீர்னு காங்கிரஸ் கட்சி மேல பயங்கர கோபம்.. 1982-ல் தெலுங்கு தேசம்னு ஒரு கட்சி ஆரம் பிச்சி.. பத்தே மாதங்களில் காங்கிரசை அடித்து நொறுக்கி ஆந்திர முதலமைச்சரானார்.

இந்திரா காந்தி கையசைப்பால் பாஸ்கர் ராவ் என்ற துரோகியால் ஆட்சியை பறிகொடுத்து, மக்களிடம் நீதி கேட்டு அசரவைத்து ஒரு மாதம் போராடி மீட்டது,, இன்னொரு முறை சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவாலும் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்ட
துரோகம்,

சொந்த வாழ்வில் புதிதாக வந்த தோழியால் குடும்பத் தில் குழப்பம்.. காங்கிரசை பரம எதிரியாக கருதினா
லும் அதனுடன் அதிமுக கூட்டணி வைத்ததை பொருட்படுத்தாமல் அமெரிக்காவில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எம்ஜிஆருக்காக 1984-ல் தமிழகத்திற்கு வந்து தனியாக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் செய்த நட்பு..

பத்மஸ்ரீ வரைக்குத்தான் விருது மைதானத்தில் இவரை ஆட்சியாளர்கள் அனுமதித்தார்கள்..மத்திய ஆட்சியாளருக்கு நம்மாளு பேரைக்கேட்டாலே அவ்வளவோ பச்சை மிளகாய்..

எல்லாவற்றையும் விவரித்தால் இவர் நடித்த திரில்லர் படங்களைவிட கலக்கலாக இருக்கும்..

சினிமாவிலும் அரசியலும் வியத்தகு சாதனைகள் புரிந்த தென்னகத்தின் டாப் ஸ்டார் ஆந்திராவின் அதிசயம் என்.டி.ராமாராவின் 96 வது பிறந்த நாள்..இன்று
-ஏழுமலை வெங்கடேசன் (மூத்த பத்திரிகையாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up