Natpunna Ennaanu Theriyumaa

Follow
6

Fair

3.5

User Avg

Natpunna Ennaanu Theriyumaa Review

நட்புன்னா என்னானு தெரியுமா- விமர்சனம்

“சிரிப்பு வர்ற மாதிரி காமெடி படங்கள் பார்த்து ரொம்ப நாளா ஆயிடிச்சு கொமாரு” என்ற கவலை கொண்டவர்களுக்கு வெயில்கால இளநீராக வந்திருக்கிறது நட்புன்னா என்னானு தெரியுமா படம்.

மூன்று நண்பர்களுக்கு படிப்பு பத்தோடு போக வாலிப வயதிலும் வெட்டியாக அலைகிறார்கள். திடீரென ஞானோதயம் வந்து ஒரு தொழில் தொடங்க அதில் சிலபல தடைகளைத் தாண்டி வெற்றிக்கொடி நாட்டும் வேளையில் மூவர் முன்பும் ஹீரோயின் என்ட்ரி. புண்ணு வந்தா உடம்புக்கும் பொண்ணு வந்தா நட்புக்கும் கொடச்சல் வரத்தானே செய்யும். வருது. வந்த கொடச்சலை கரைச்சல் இல்லாமல் எப்படிக் கடந்தார்கள் என்பதே கதை.

குடும்பமலர் கவிதை போல கொட்டாவி விடும் கேப்பில் படித்துவிடக் கூடிய கதை. அதை மிட்டாய் போல இனிக்க இனிக்க தந்ததில் இயக்குநர் வெற்றி அடைந்திருக்கிறார். மூன்று நண்பர்களில் ஹீரோ கவின் அழகாக இருப்பது போலவே சீரியல் வாடை தெரியாமல் நடிக்கவும் செய்திருக்கிறார். அருண்ராஜா காமராஜ் கொண்டாட வைக்கிறார். டைமிங்கும் நல்லா வருது பாடிலாங்வேஜும் நல்லா வருது. நல்லா வந்திட்டீங்க பாஸ்! ராஜு பின்பாதியில் ஒன்லைனர்களிலும் ரியாக்‌ஷன்களிலும் தெறிக்க விட்டிருக்கிறார். ஒருசில இடத்தில் நேற்று இன்று நாளையின் நகலான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஞாபகம் வந்து போகிறது. மூவரின் பாத்திரப் படைப்பு அப்படி.

பாட்டும் பின்னணி இசையும் படத்திற்கு பெருங்கோளாறை ஏற்படுத்தி இருக்கிறது. ஒளிப்பதிவு இருப்பதை இருப்பது போலவே காட்டி இருப்பது சிறப்பு. வசனங்களில் மெனக்கெட்டதை முன்பாதி திரைக்கதையிலும் மெனக்கெட்டிருந்தால் முன்பாதியும் கெட்டியாக வந்திருக்கும். குறிவைத்து கொத்துப் பரோட்டோ போடும் அளவில் லாஜிக் லூப்ஸ் எதுவும் படத்தில் குறையாக தெரியவில்லை. ரம்யா நம்பீசன் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறார். அவர் கேரக்டர் தான் பாவமாக இருக்கிறது. இந்தப்படத்தை கொண்டாட பெரிய எதிர்பார்ப்பில்லாத மனநிலையோடு தியேட்டருக்குச் செல்லவேண்டும் என்பது பின்குறிப்பு.

இந்த வேகாத வெயிலுக்கு விலா நோக சிரிக்கணும்னா உங்களுக்கு நட்புன்னா என்னானு தெரியணும். டக்குன்னு போய்ப் பார்த்திடுங்க.

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up