Nedunalvaadai

Follow
8.5

Great

9.6

User Avg

Nedunalvaadai Review

Review

நெடுநல்வாடை- விமர்சனம்

“நல்லாருப்ப. காலம் பூராம் நீ தனியா கெடந்து என்ன சித்ரவதைப் பண்ணாத” ன்னு படத்துல ஒரு வசனம் வரும். அப்பம்லாம் நம்ம ஈரக்கொல லேசா வலிக்கும். ஏன்னா நம்மள்ள இங்க நெறயாவேரு நமக்குப் பிடிச்சவங்கள நம்ம தியாகத்தாலே சங்கடப்படுத்திருப்போம்!
“பொண்ணடி மவான்னா என்னல. அவா எனக்குப் பெறக்கலியோ?னு ஒரு இடத்துல கருவாத்தேவரு வெடிச்சி அழும் போது, கெட்டி கொடுத்த பொட்டப்பிள்ளிய சலப்படுததை பாக்கச் சகிக்காம காலம் பூராம் அல்லல் படுத தவப்பன் மார்வ கண்ணுல வந்து போவாங்க. இந்த ரெண்டும் சும்மா ஒரு சோறு பதம் தான். இதை மாதி படம் முழுத்தும் நம்மப் போட்டு அழுத்தும் சம்பவங்க நெறயா இருக்கு.
மதுரையில இருந்து பாரதிராசா வந்த மாதி நம்ம திருநெல்வேலில இருந்து செல்வகண்ணன் வந்திருக்காப்ல. படத்துல வார நடிக மக்கள பக்கத்து வீட்ல வாழுத மக்களா காட்டுன நேர்த்தி ஒண்ணு போதும். “ஒரு கிராமத்தான் சினிமாக்காரனா ஒசரத்துல நிக்கான்டே”ன்னு சொல்ல.

கலங்கி நிக்க மவாளுக்காண்டி கருமாயப்படுத கருவாத் தாத்தா கரும்புத்தோட்டம் வச்சிருக்காரு. ஆனா சவம் ஒரு இனிப்பும் இல்லாம கடக்குது அவரு வாழ்க்க. அமுதாவும் இளங்கோவும் மனச மாத்திக்கிட்டதைப் பாத்து அவரு தவிக்கதும், இளங்கோ தூக்கம் வராம கெடந்து அழுவுததைப் பாத்து பெறவு மனசுக்குள அவரு சமாதானம் ஆவுறதும் கள்ளிக் காட்டு இதிகாசம்யா!”

பூராமு, அஞ்சலிநாயரு, அலெக்ஸு, செந்தி இவங்க ஒவ்வொரு சீன்ல வரும் போதும் போம்போதும், நம்மச் சொந்தக்காரங்க நினைப்ப கொண்டாந்து நெஞ்சில எறிஞ்சிட்டுப் போறாங்க.
தோடத்துல மோட்ரு கிட்ட அமுதாவும் இளங்கோவும், சாவத்தண்டியும் மீட்டெடுக்க முடியாத அந்தச் சந்தோஷ காலத்தை இழந்து நிக்கதை சிங்கிலிப்பெட்டி பாறையில நின்னு பாத்தா ஈரக்கொல ரத்தம்லாம் சுண்டிப்போவும்.

செத்தயும் எடம் கிடைச்சாலும் சொந்தச் சாதிப் பெருமையை எறக்கிவுட்ருத சினிமாவுக்குள்ள துளியும் சாதி இல்லாம சுத்தமான நெஞ்சிவள வழிச்சியெடுத்து படம் பண்ணிருக்காரு செல்வகண்ணன்.

வார்த்தைவளை பலமா கொடுத்த வைரமுத்துவும், இசையை வரமா கொடுத்த ஜோஸ் ப்ராங்க்ளினும் நெடுநல்வாடையை நெஞ்சில ஏந்திக்கிட்ட ஆம்பள தேவதைவ.

புளியங்குடில உள்ள புளியமரமும், பக்கத்தூர்ல இருக்க கரும்புத் தோட்டமும், மண்டோலம் காய்க்கயில பொங்குத அந்தப் பாவும், அமுதா இடுப்புல வச்சிருக்க தண்ணிக் கொடமும், ஊர்வளுல இருக்க வீடுவளும்… ஒண்ணொன்னா ஏன் சொல்வானேன்..கேமராவுல வார மொத்த படமும் இந்த கேமராமேன் வினோத் ரத்தனசாமிங்க ஒத்த மனுசன் சொன்னதை எல்லாத்தையும் கேட்டுருக்கு. அவரு கேமரா படத்துல யாருக்கும் எதுக்கும் எதுவும் பூசாம அப்படியே காட்டிருக்கு.

50வேர்ட ரூவா பொரட்டி அம்பாயப்படுத்துன கோஷ்டிவள வெரட்டி, மொத்த ஒழப்பையும் தெரட்டி தரமா படம் எடுத்துருக்க செல்வகண்ணன் தாம் இந்த நெடுநல்வாடையோட பாட்டுடைத் தலைவன்.

படம் முடிஞ்சி வெளில வரும்போது, செல்வகண்ணன் சொன்ன ஒரு விசயம் மனசுல தோணும்.

“ஒண்ணு இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்த காலத்தை நினைச்சி வெம்முவீய. இல்லனா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ முடியாமப் போச்சேன்னு ஏங்குவீய”

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up