ஒரு நாளைக்கு நூறு முறை காதில் பேசும் தெய்வம்..

ஒரு நாளைக்கு நூறு முறை காதில் பேசும் தெய்வம்..

தற்கொலை முடிவில் மகனை தள்ளிவிட்டு பின்னர் மாண்டுபோகலாம் என்று செயல்பட்ட தாயிடம், ‘’மொதல்ல குளத்துல நீ குதி.. ஒருவேளை என்னை தள்ளின பின்னாடி நீ குதிக்கலைன்னா?’’

– இப்படி கேட்டு உயிர்பிழைத்த சிறுவன்தான், கோடானு கோடி மக்களின் காதுகளில் இன்றைக்கும் அமிர்தமாக பாய்ந்துகொண்டிருக்கிறார்.

மளையாள மண்ணில் பிறந்த அவர்தான், இன் றைக்கு தமிழர்களி்ன் நாட்டுப்பண்ணாக திகழும், நீராரும் கடலுடுத்த நிலமடந்தை என்று தொடங்கும் பாடலுக்கு இசையமைத்து உதடுகளில் இனிமையாக ஒலிக்கச் செய்தவர்..

இசை-எம்எஸ் விஸ்வநாதன் என்ற ஒற்றைவரியை புதுப்பட போஸ்டர்களில் பார்க்கும்போதே மனதில் அவ்வளவு குதூகலம் பிறக்கும்..

காரணம், எளிமையான மெல்லிசை..எம்எஸ்வி யின் பாடல்களை கேட்க மேதாவித்தனமெல்லாம் தேவையில்லை..

பாவமன்னிப்பு படத்தின் எல்லோரும் கொண்டாடு வோம் அல்லாவின் பேரை சொல்லி, பாடலை, ஒரு சாமான்யன்கூட சாப்பாட்டுத்தட்டை தட்டியபடியே நேர்த்தியாக இசையை கோர்த்துவிடமுடியும்..

இவ்வளவு வெகுஜன ஈர்ப்பு இசையில் இருந்ததற்கு காரணம், எம்எஸ்வி என்ற மனிதன் வாழ்வில், கடைசி உயர்மூச்சுவரை கூடவே இருந்த பாமரத்த னமும், கள்ளம் கபடமில்லா குழந்தைத்தனமும் தான்.

1930களில் சிறுவனாக இருந்தவருக்கு நடிப்பும் இசையுமே மிகப்பெரிய வாழ்க்கை லட்சியமாக துடித்துக்கொண்டிருந்தது. இதற்காக பல இடங்களில் எடுபிடி செய்யவும் அவர் தயங்கியதே இல்லை..

1940களில் சினிமாவில் தலைகாட்டும் வாய்ப்பு கிடைத்தாலும், அவையெல்லாம் மின்னல் வேகத் தில் கடக்கும் வேதனையான தோன்றல்களே..

ஏதோ ஒரு தருணத்தில், நடிப்பை பின்னுக்கு தள்ளி வைத்துவிட்டு ஆர்மோனியம் மூலம் இசையை உரசிப்பார்க்கும் எண்ணம் வந்துவிட்டது.

இன்றைக்கு ஆஸ்கார் விருது வென்ற ஏஆர் ரஹ் மான் எப்படி ஒரு காலத்தில் சின்ன சின்ன இசைக் குழுக்களில்லாம் வாசித்து தள்ளினாரோ, அதைப் போல் 1940களில் எம்எஸ்வி வாசிக்காத இசைக் குழுக்களும் இசையமைப்பாளர்களுமே கிடையாது.

எஸ்வி வெங்கட்ராமன். எஸ்எம் சுப்பையா நாயுடு, சிஆர் சுப்பாராமன் என ஒரு பட்டியலே உண்டு. எல்லாருக்குமே தெரிந்த ஒரு விஷயம், விஸ்வ நாதன் திறமையான பையன்..நிச்சயம் ஒரு நாள் அவன் கொடி தமிழ்சினிமாவில் பறக்கத்தான் போகிறது என்பது.

ஏனென்றால் உதவியாளர் என்ற முறையில் எம்எஸ்வி போட்ட டியூன்களில் பல தடவை ஜாம்பவான் இசையமைப்பாளர்களுக்கு பெரும் புகழையும் விளம்பரத்தையும் தேடித்தந்துள்ளது.

என்டிஆர் பானுமதி நடித்து 1953ல் வெளிவந்த சண்டிராணி படம் என்றைக்கும் பேசப்படும் என்றால், அதற்கு முக்கியமான விஷயம், அதில் இடம்பெற்ற ‘’வான் மீதிலே இன்பத்தேன் மாரி பெய்யுதே’’ என்ற பாடல். இசை குருநாதர் சிஆர் சுப்பாராமன் பெயரில் இருந்தாலும் டியூன் போட்டது விஸ்வநாதன்தான்.

இந்த பாடல் சாமான்யர்களை கவர்ந்தது பெரிய விஷயமல்ல.. பெரிய பெரிய இசையமைப்பார்களே சொக்கிப்போனார்கள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

அதிலும் நம்ம இசைஞானி இளையராஜா, இந்த பாடலின் தீவிர அடிமை.. எம்எஸ்வியோடு பின்னா ளில் இணைந்து பணியாற்றிய மெல்லத் திறந்தது கதவு படத்தில் , வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே என்று பாடலுக்கு வேண்டிவிரும்பி மறுவடிவம் கொடுக்கவைத்தவர் இளையராஜா.

குருநாதர் சி.ஆர்.சுப்பராமனிடம் எம்எஸ்வி போட்ட சில டியூன்களின் மகிமை பின்னாளில் எப்போது தெரியவந்தது என்றால் குருநாதர் மறைந்து, அவரின் படங்களை எம்எஸ்வி முடித்துக்கொடுத்தபோது தான்..

தெலுங்கு ஜாம்பவான் நடிகர் நாகேஸ்வர்ராவ் வாழ்வில் எவரெஸ்ட் சிகரம்போல இன்றைக்கும் இருக்கும் தேவதாஸ் பாடல்களும் இப்படித்தான் எம்எஸ்வியால் காவியங்களாக வழங்கப்பட்டன.

எம்எஸ்வியின் திறமையை தெரிந்து அவருக்கு முதலில் வாய்ப்பளித்தவர் கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன்தான்.. நடிகர் திலகம் சிவாஜியின் இரண் டாவது படமான பணம் படத்தை என்எஸ்கே தயாரித்து இயக்கினார்.

இந்த படத்தில் விஸ்வநாதனையும் சிஆர் சுப்பரா மனிடம் வயலினிஸ்ட்டாக பணியாற்றிய டி.கே ராமமூர்த்தியையும் இணைத்து விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற இரட்டையரை உருவாக்கினர்.

இந்த நேரத்தில் ஜெனோவா படத்திற்கு இசைய மைக்க எம்எஸ்விக்கு வாய்ப்பு கிடைத்தது.. ஆனால் படத்தின் ஹீரோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஜூபிடர் பிக்ஸ்சர் சில் ஆபிஸ் பாயாக இருந்தவர் என் படத்துக்கு இசைய மைப்பதா என்று கேள்வி கேட்டார். அவர் வேறு யாருமல்ல சாட்சாத் எம்ஜிஆர்தான்.

இத்தனைக்கும் எம்எஸ்வியின் குருநாதர் சி.ஆர்.சுப்ப ராமனுக்கும் எம்ஜிஆருக்கும் இடையே ஒரு சிறிய வரலாறு உண்டு.

1947ல் எம்ஜிஆர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தாலும் அதன்பின்னர் வெளி வந்த. ரத்னமாலா, பைத்தியக்காரன், அபிமன்யு, மோகினி ராஜமுக்தி, ரத்னகுமார் ஆகிய படங்களில் அவர் இரண்டாது ஹீரோதான். இவை அனைத்துக் குமே சிஆர் சுப்பராமன்தான் இசை.

இந்த காலகட்டங்களில்தான் எம்எஸ்வி என்ற இளை ஞர் எம்ஜிஆரின் பார்வையில் ஆபிஸ்பாயாக தெரிந்தி ருக்கிறார்.கடைசியில் ஜெனோவா படத்தில் அரை குறையாக எம்ஜிஆர் சம்மதிக்க விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்கின்றனர்.

இப்படி பணம்-ஜெனோவா என ஒரே நேரத்தில் இருபெரும் திலகங்களுடன் எம்எஸ்வியின் பயணம் ஆரம்பமானது..

1955ல் வெளியான எம்ஜிஆரின் படமான குலேபகா வலி, மாஸ் ஹிட்.. எம்எஸ்வி ராமமூர்த்தி போட்ட பாடல்கள் அத்தனையும் தியேட்டர்களுக்கு திரும்பத் திரும்ப வரவழைக்கிற ரகமாக அமைந்து போய்விட்டது..

1956ல் எம்கே.ராதா நடித்த பாசவலையும் விஸ்வ நாதன் ராமமூர்த்தி பாடல்களுக்காகவே தறிகெட்டு ஒடிய படம்.. அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை..’’ ‘’ உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துக்கெதுதான் சொந்தமடா’’ ‘’லொள்லொள் லொள்’’ என பத்து பாடல்கள்.

சிவாஜி நடித்த புதையல் படத்தின் ‘’விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’’ கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கையின் ‘’ஆடை கட்டிவந்த நிலவோ’ போன்ற பாடல்கள் 1950களின் இறுதி கட்டத்தை விஸ்வநாதன் ராமமூர்த்தி வசம் ஒப்படைத்துக்கொண்டிருந்தன.

எம்எஸ்வி வாழ்க்கையில் வேகமான ஒட்டத்திற்கு நிரந்தரமாய் களம் அமைத்தவர் இயக்குநர் ஏ.பீம்சிங்… இவரது பதிபக்தி படத்தில் சிவாஜியும் ஜெமினியும் இணைய, இசைக்காக எம்எஸ்வியும் சேர்ந்தார்.

அதன்பிறகு பாகப்பிரிவினை, பாசமலர் பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பார் மகளே பார், பச்சை விளக்கு என படங்கள் வரிசையெடுத்தன..

தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து..

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்..

மலர்ந்தும் மலராத பாதி மலர்போல

காலங்களில் அவள் வசந்தம்.. என தமிழ் திரையுலகில் ராமமூர்த்தியோடு சேர்ந்து காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாய் கொடுத்தார் எம்எஸ்வி..

இன்னொரு பக்கம் எம்ஜிஆருடன் மன்னாதி மன்னனில், அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என்று ஜெட் வேகத்தில் விறுவிறுவென மேலே ஏறியது..

பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா,

1970களில் இன்னும் அதகளம்.. பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பாடலெல்லாம்.. பக்கா லோக்கல் மாஸ்..

நினைத்தாலே இனிக்கும் பில்லா போன்ற படங்களெல்லாம் இளையராஜா என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் இன்றும் நிறைய பேர்..

போன வருஷம் எழுதுன பதிவு.. இந்த வாரத்துலயாவது மீதிய சொல்லலி முடிக்கணும்.

#HBD_MSV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up