Thorati

Follow
7.5

Good

9

User Avg

Thorati Review

தொரட்டி – விமர்சனம்

1980 காலகட்ட த்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கால்நடைகளோடு காலநடையாக கிடை போடும் பிழைப்பிற்காக வருகிறது நாயகன் குடும்பம். கூடா நட்பு எனத் தெரியாமல் திருட்டுத் தொழில் செய்யும் மூன்று நண்பர்களோடு ஆடும் கறியுமாக பழகுகிறான் ஹீரோ. குடி அவர்களோடு சேர்த்து அவனையும் குடிக்க, நாயகி ஹீரோ வாழ்வுக்குள் மனைவியாக என்ட்ரி. பின்னான கதையில் சில விருப்பமில்லா திருப்பங்களோடு படம் முடிவடைகிறது.

எந்தச் சமரசமும் இல்லாமல் கிராம மக்களின் வாழ்வை முக்கியமாய் இன்றைய சமூகம் மறந்தே போயிருக்கும் கிடை போடுபவர்களின் வாழ்வை அச்சு அசலாக பதிவு செய்த இயக்குநர் மாரிமுத்துவிற்கு முத்தான பூங்கொத்து.

ஷமன்சத்ரு தான் ஹீரோ என்றாலும் நாயகியாக வரும் சத்யகலா இரண்டுபேருக்கும் சேர்த்தே நடித்து விடுகிறார். அதனாலே படத்தில் ஹீரோவை விட அவர் தான் விஞ்சி நிற்கிறார். மூன்று வில்லன்களும் தரமான தேர்வு. இடைவேளைக்குப் பிறகான அவர்களின் காட்சிகள் எல்லாம் நெஞ்சை பதைக்க வைப்பவை.

ஒளிப்பதிவும் பாடல்களும் தொரட்டியை உச்சியில் வைத்து உச்சி முகரச் சொல்கிறது. லாஜிக் ஓட்டை எதுவுமே இல்லாதது தான் எதார்த்த சினிமாவிற்குஅழகு என்ற எதார்த்தத்தை இயக்குநர் புரிந்து வைத்திருக்கிறார். எந்த இடத்திலும் லாஜிக் கேள்விகள் பெரிதாக எழவில்லை.ஆயினும் ஹீரோ குடிகாரனாக மாறுவதற்கான காரணம் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கலாம் அந்தத் தீய நட்பில் நாயகன் இணைவதற்கான காரணத்தையும் ஸ்ட்ராங்காக சொல்லி இருக்கலாம். இவை போன்ற சின்னச்சின்ன குறைகளை நிவர்த்தி செய்து நேட்டிவிட்டியில் காட்டிய நேர்த்தியை திரைக்கதையிலும் காட்டி இருந்தால் தொரட்டி அட்டகாசமாக மிரட்டி இருக்கும்.

கமர்சியல் சினிமா கழிசடை சினிமா என வெந்து கிடக்கும் போதெல்லாம் ஆபத்பாந்தனாக பரியேறும் பெருமாள், நெடுநல்வாடை ஆகிய படங்கள் நம்மை நம் வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும். இந்த தொரட்டியும் அப்படித்தான்!

-மு.ஜெகன்சேட்

Lost Password

Sign Up